வெள்ளம் பாதித்த பகுதிகளில், 9 மாதம் முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு, தட்டம்மை ரூபெலா தடுப்பூசி கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயலின் தாக்கத்தால் கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது .இந்தப் பகுதியில் வெள்ளத்தோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வயிற்றுப்போக்கு ,காய்ச்சல், நீரினால் பரவும் நோய்களை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் நிவாரண மருத்துவ முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு ‘தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் வெள்ள பாதிப்புகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் ‘9 மாதம் முதல் 15 வரை ‘உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் “தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ‘ஒரு டோஸ்’ போட வேண்டும்” என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மருத்துவ சேவையைக் குறித்து 104 என்ற எண்ணினைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.