யானை கவுனி மேம்பாலம் புதுப்பித்தல் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. வடசென்னைக்கும் சென்னை சென்ட்ரலுக்கும் இடையேயான ‘யானை கவுனி’ மேம்பாலம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. யானை கவுனி 1933 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மேம்பாலம் ஆகும். போக்குவரத்து நெரிசலால் நாளடைவில் இந்த மேம்பாலம் சேதமடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது. சென்னை மாநகராட்சி 2020 ஆம் ஆண்டு யானை கவுனி மேம்பாலம் புதுப்பித்தல் பணியைத் திட்டமிட்டது. ரயில்வே பாதை வழியாக இந்த பாலம் அமைவதால் தெற்கு ரயில்வே ஒப்புதலுடன் சென்னை மாநகராட்சி இணைந்து 50:50% பங்களிப்பை மேற்கொண்டுள்ளது.
முன்பு 50 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலம் தற்போது புதிதாக 150 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புரசைவாக்கம், எழும்பூர் போன்ற சென்னை நகரங்களின் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். வலது புறமாக பேசின் பிரிட்ஜ் இடது புறமாக சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமுனை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த யானை கவுனி மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது 90% மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த யானை கவுனி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் ரயில்கள் தாமதமின்றி வரவும், கூடுதல் ரயில்களை இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.