ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கெங்கபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் கெங்கா புரத்தில் தென்காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் மே 31ஆம் தேதி வேத மந்திரங்களுடன் கருட கொடியேற்றத்துடன் இந்த பிரம்ம தேரோட்டம் தொடங்கப்பட்டது. சென்ற வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்தே நாள்தோறும் சிறப்பு திருமஞ்சனம்,விசேஷ அலங்கார ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து முதல் நாளில் சிம்ம வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவீதி உலா வந்தார். இரண்டாவது நாளாக பெரிய திருவடி சேஷ வாகனம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம், மாலை அனுமந்த வாகனம் சேவையும் நடைபெற்றது .திங்கள் கிழமை யானை வாகனத்தில் ஸ்ரீ வரத ராஜபெருமாள் காட்சியளித்தார். இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ பெருந்தேவி உடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளித்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள்”கோவிந்தா கோவிந்தா” என முழக்கமிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளின் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.