மதுரையில் சர்வதேச தரப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல மதுரையிலும் மாபெரும் நூலகமாக “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கட்டப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஆன கலைஞர் அவர்களின் பெயரில் மதுரையில் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ரூபாய் 99 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டப்பட்டு வருகிறது. 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
சிறுவர்கள் ,மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக தயாராக கூடியவர்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் நூலகத்தில் நூல்களும், பார்வைத்திறன் குறைபாடு உடைய வாசகர்களுக்காக பிரெய்லி எழுத்துக்களால் அமைந்த நூல்களும், மேலும் இலக்கியம் தொடங்கி சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 3 லட்சத்து 50 ஆயிரத்து புத்தகங்களும் இடம்பெற உள்ளன. இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் மதுரையில் சர்வதேச தரப்பில் கட்டப்பட்டு வரும் நூலகம்’ கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயரிட்டு வருகிற ஜூன் மாதம் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.