தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 2021 ஆம் ஆண்டு 24 மணி நேரமாக வழங்கப்பட்டது. அதன்பின்பு 18 மணி நேரமாக குறைக்கப்பட்டது. தற்போது இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து விவசாயத்திற்கு 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 12 மணி நேரம் மின்சாரம் குரூப் 1, குரூப் 2 என 2 தவணையாக பிரிக்கப்பட்டு டெல்டா பகுதிகளில் வழங்கப்படுகிறது.
குரூப் 1 பகல் 8 .30 மணி முதல் 2.30 மணி வரையும், குரூப் 2 இரவு 11 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த 2 தவணையாக மின்சாரம் வழங்கப்படுவதால் பம்பு செட்டுக்கு மோட்டார்கள் இயக்குவது இரவு பகல் தோட்டத்தில் மாறி அலைய வேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களுக்கு தொடர்ந்து நீர் பாய்ச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே 12 மணி நேரம் மின்சாரத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் ராமலிங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளார்.