சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவைப் போற்றும் விதமாக பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதற்கு தமிழகத்தின் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க 15 நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நினைவிடத்திற்கு அருகில் 81 கோடி செலவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் மெரினாவில் அமைக்கப்படவுள்ளது.
கடல் நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை அமைத்தால் கரையோர தொழிலை நம்பி உள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் ஆதலால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்களின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.