ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெறவிருந்தது. இப்போட்டி மழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டனான தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷிப்மன் கில் 39 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் பந்து வீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கின் மூலம் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் குவித்தது.
நேற்றும் மழை நீடித்ததால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு, களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருத்ராஜ் 26 ரன்கள், கான்வே 47 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்திற்கு வழி வகுத்தனர். அம்பத்தி ராயுடு ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களைப் பறக்க விட்டு ஆட்டத்திற்கு வலு சேர்த்தார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்த நம்பிக்கை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு த்ரில் வெற்றியைக் கைப்பற்றினார்.