கோவையில் அமைக்கப்பட்டு வரும் வ.உ.சிதம்பரனாரின் 7 அடி உருவ சிலையை தமிழக முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார். நம் நாடு ஆங்கிலேரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் வ.உ.சி நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் செக்கிழுத்தார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாக மனப்பான்மையின் நினைவாக கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையில் வ.உ.சி உருவ சிலை அமைக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 50 அடி அகலமும் 45 அடி நீளமுள்ள இடத்தில் சிலை அமைக்க திட்டமிட்டது.
சென்னை ராமாவரத்தில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்திலிருந்து உலோகங்கள் கோவைக்கு கொண்டுவரப்பட்டு சிலை உருவாக்க பணி தொடங்கப்பட்டது. இதன் பின்னர் ரூபாய்” 40 லட்சம் மதிப்பில் பொது பணித்துறை சார்பில் வ.உ.சியின் முழு உருவச் சிலை வடிவமைக்கப்பட்டது. தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை, அதன் மீது 7 உயரத்தில் பீடம், 7 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டது. மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது”. தற்போது தமிழக முதல்வர் நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ திறந்து வைப்பார் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.